வடபகுதியில் நடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலின் முடிபுகள் வெளிப்படுத்திய அதிர்வலைகள் நீண்டதொரு வரலாற்றுச் சிறப்பம்சமாக அமைந்துவிட்டது என்பது மறுக்கமுடியாத உண்மை. ஏனெனில் யாருமே எதிர்பார்க்காத வகையில், தமிழ் மக்கள் தங்கள் தீர்ப்பினை வழங்கியிருந்தனர். யாருக்கு வாக்களிப்பது என்று அடுத்தவருக்கும் சொல்லாமல் வீட்டிலிருந்து வாக்களிப்பு நிலையம் – மை பூசுதல், வாக்களித்தல் – மெளனம் காத்தல் – மீளவும் வீடு திரும்புதல் – வழமைபோல் தம் வேலையில் ஈடுபடுதல் என்ற ஒழுங்கில் மிகவும் பெளவியமாக தமிழ் மக்கள் நடந்துகொண்டனர். தமிழ் மக்களிடம் இத்தகையதொரு ஒற்றுமையை, உத்வேகத்தை – உணர்வுபூர்வமான முடிவை உண்டுபண்ணிய பெருமை இந்த நாட்டின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்இஷவையே சாரும். உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் மக்களுக்கு உத்வேகத்தைக் கொடுத்தவர் ஜனாதிபதி என்றால், ஜனாதிபதிக்கு அந்தச் சிந்தனையைத் தூண்டியது சனல் 4 என்று கூறலாம். இதற்குமேலாக வன்னிப் போரில் அரசு வெற்றியீட்டிய பின்னர், தமிழர்கள் தலையயடுக்காத வகையில் சில திட்டங்கள் ஜனாதிபதி தரப்பால் தீட்டப்பட்டது. அதில் இரு பிரதான கட்சிகள் மட்டுமே இருக்க முடியும் என்பது முக்கியமானதாகும். அதாவது இலங்கையில் இனத்தின் பெயரால் அரசியல் கட்சிகள் இயங்க முடியாது. அதேசமயம் சிறுபான்மை இனங்கள் தங்களுக்கென அரசியற்கட்சிகளைக் கொண்டிருக்க முடியாது. இரண்டு பிரதான கட்சிக்குள் இந்த நாட்டின் அனைத்து மக்களையும் உள்ளடக்குவதே அரசின் நோக்கமாக இருந்தது. தமிழ் மக்கள் எக்காலத்திலும் தங்கள் இனம் பற்றிச் சிந்திக்காமல் இருப்பதை உறுதிசெய்வதற்காக முன்னெடுக்கப்பட்ட திட்டம் நீதிமன்றத்தின் தலையீட்டால் நின்றுபோனது. எனினும் தமிழ் அரசியல் கட்சியான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியை தனித்துப் போட்டியிடாமல் தடுத்து, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடுவதற்கான ஏற்பாட்டை ஜனாதிபதி செய்திருந்தார். ஜனாதிபதியின் இந்தத் திட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழ் அரசியல் தரப்பாக இருப்பதை தடுப்பதாகும். எனினும் ஜனாதிபதியின் இச்சிந்தனை தோல்விக்குரியது என்பதை தேர்தல் முடிவுகள் அறுதியிட்டுக் கூறியுள்ளன. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது வீணைச் சின்னத்தில் தேர்தல் களத்தில் இறங்கியிருந்தால் தேர்தல் முடிவுகள் அதற்கும் இதற்குமாக இருந்திருக்கும். ஆனால் வெற்றிலைச் சின்னம் வீணை பற்றிய நினைப்பையே மறைத்துவிட்டது. ஆக, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி தனது வீணைச்சின்னத்திலன்றி வெற்றிலைச்சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற ஜனாதிபதியின் முடிவும் வடபுலத்தில் அரச தரப்பிற்கு ஏற்பட்ட மாபெரும் தோல்விக்கு ஒருவகைக் காரணம் எனலாம். என்ன செய்வது? ஊழ்வினை வந்து உறுத்தும்போது மாரகச் சிந்தனைகளே வெளிப்படும்.
நன்றி: வலம்புரி