ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் தனக்கு எதிராகக் கொண்டுவரப்படக்கூடிய தீர்மானத்தில் இருந்து தப்புவதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ள இலங்கை அரசு, மேற்குலகின் முக்கிய நாடுகளுக்கு விடுத்த தூது முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. மேற்கு நாடுகளுடன் பேசி இலங்கைக்கு எதிரான அவற்றின் கடும் போக்கை மாற்ற மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் நஷீட்டின் உதவியை கொழும்பு நாடி இருந்தது.
எனினும் இது தொடர்பில் நஷீட் விடுத்த கோரிக்கைகளை மேற்கு நாடுகள் நிராகரித்துவிட்டன என்று இராஜதந்திர வட்டாரங்கள் நேற்றுத் தெரிவித்தன.இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் மீள் பரிசீலனை செய்யப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டிலுள்ள மாலைதீவு ஜனாதிபதி, மஹிந்த ராஜபக்ஷவுக்கும் நெருக்கமானவர். எனவேதான் மேற்கு நாடுகளுடன் பேசி இணக்கம் ஒன்றுக்கு வருவதற்கு அவரது உதவியைக் கொழும்பு நாடி இருந்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் அமெரிக்கா மற்றும் பிரிட்டனுடன் மாலைதீவு ஜனாதிபதி பேச்சுக்களை நடத்தினார்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திலுள்ள முக்கியமானவர்களுடனும் பிரிட்டனின் வெளியுறவுத்துறை உயர் மட்டத்தினருடனும் தொடர்பு கொண்ட மாலைதீவு ஜனாதிபதி இலங்கைக்கு எதிரான கடும்போக்கை இந்த நாடுகள் மேற்கொள்வது சரியல்ல என்று கேட்டுக்கொண்டார்.
மனித உரிமை மீறல்கள் இலங்கையில் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படுவது தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது எனவும் இதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் மாலைதீவு ஜனாதிபதி இந்த இரு நாடுகளுக்கு எடுத்துக் கூறியிருக்கிறார். எனவே தவறான தகவல்களின் அடிப்படையில் இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது நல்லதல்ல என்ற வாதத்தையும் அவர் முன்வைத்துள்ளார்.ஆனால் மாலைதீவு ஜனாதிபதியின் இந்தக் கோரிக்கையை மேற்படி நாடுகள் முற்றாக நிராகரித்துள்ளன என்று கொழும்பில் உள்ள இராஜதந்திர வட்டாரங்கள் கூறுகின்றன.
மனித உரிமை மீறல்கள் குறித்தான சர்வதேச சமூகத்தின் குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை அரசு இதுவரை சரியான பதிலை வழங்கவில்லையென்று சுட்டிக்காட்டியுள்ள அமெரிக்காவும் பிரிட்டனும், இலங்கை தன் மீதான குற்றச்சாட்டுகளைச் சரியான வகையில் தெளிவுபடுத்தவேண்டும் என்றும் எடுத்துக்கூறியிருக்கின்றன.அப்படிப்பட்ட ஒரு நிலையில், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிப்பதற்கு இலங்கைக்கு இன்னும் மூன்று மாத கால அவகாசத்தை வழங்கவேண்டுமென மாலைதீவு ஜனாதிபதி இந்த நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார