சேர்ந்தே இருப்பது ரீயும் வடையும். சேராமல் இருப்பது தமிழர்களும் ஒற்றுமையும்
ரீ வடை என்கிற பெயரில் இந்த இணையதளத்தை தமிழ்மக்களுக்கு அறிமுகப்படுத்துவதில் நாம் சரித்திர ரீதியாக பெருமையடைகிறோம். தமிழர்களுடைய வாழ்வில் ரீயும் வடையும் பின்னிப்பிணைந்தவை. தமிழர்களுடைய வீட்டிற்கு விசிட் பண்ணினால் முதலில் மேசைக்கு வருவது ரீதான். விருப்பம் இல்லாவிட்டாலும் என்ன கன்றாவி ரீயாக இருந்தாhலும் முகத்திற்காக குடித்துத்தான் ஆக வேண்டும். சிலர் ரீ குடித்து அரட்டையடிப்பதற்காக விசிட் போவதும் உண்டு. சும்மா இஞ்சாலப்பக்கம் ஒரு அலுவலாக வந்தனான். அப்படியே உங்களையும் பார்த்துப்போவம் எண்டு ஒரு ரீக்காக பொய்சொல்லும் பேர்வழிகள் பலர் தமிழர்களில் உண்டு. அரட்டை, அரசியல், கூட்டம் என எல்லாவற்றிலும் ரீக்கு முக்கிய பங்கு உண்டு. ரீபார்ட்டி வைத்து இந்தியாவில் ஆட்சியைக் கவிழ்த்த சம்பவமும் உண்டு. நோர்வேயிலிருந்து புலிகளின் தலைமைச்செயலகத்திற்கு ரீ குடிக்கப்போன சமாதானத்தூதுவர்களும் உண்டு. ஆகவே ரீ தமிழர்களின் வாழ்வில் பின்னிப்பிணைந்த குடிபானம். அதுபோல் வடையும் தமிழர்வாழ்வில் மகத்தான இடத்தை வகிக்கிறது. தமிழர்களின் விழாக்களில் வடை இல்லாத விழா ஏதம் உண்டா என்றால் இதுவரை இல்லை என்றே சொல்ல வேண்டும்.
புலம்பெயர்நாடுகளில் நடைபெறும் எல்லா நிகழ்ச்சிகளிலும் வடை விற்பனைக்கு வருவதும் உண்டு. புலிகள் கூட வடை வித்து வாங்கிய பணத்தில் விமான எதிர்ப்பு ஏவகணைகளை வாங்கிய சம்பவமும் உண்டு. ரீயோடு வடையுமிருந்தால் தமிழர்களுக்கு ஒரு அலாதி சந்தோசம். கல்யாண வீடோ சாமாத்திய சடங்கோ அல்லது பிறந்தநாள் நிகழ்ச்சியோ வடையுடன் ரீ இருந்தால்தான் அவை முழமைபெறும். இல்லாவிட்டால் விருந்துக்குப்போனவனின் விமர்சனத்திற்கு யாரும் தப்ப மாட்டார்கள். ஆகவேதான் நாம் ஆரம்பித்துள்ள இந்த இணையத்திற்கு ரீ வடை எனப்பெயர் வைத்துள்ளோம்.( அப்பாடா இப்பதான் சந்தோசம்)
இப்போது எல்லாம் இணையத்தளத்தை யாரு வேணும் என்றாலும் ஆரம்பிக்கலாம் என்றாகி விட்டது. இதற்கு கல்வியறிவு பொது அறிவு எதுவும் தேவையில்லை. ஒரு கம்பிய+ட்டரும் மேசையில் ஒரு கப் ரீயும் இருந்தால் போதுமானது. இலவச தளங்கள் நிறைய வந்து விட்டன. தமிழில் டைப் அடிக்கத் தெரிந்தால் சரி. அதுவும் தமிழர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும்.
குப்பையாக மலிந்து கிடக்கும் இந்த இணையத்தள உலகில் நாங்களும் ரீ வடையோடு உங்களை சந்திக்க வருகிறோம். தமிழ்மக்களுக்கு அரசியல் புகட்டவோ அல்லது புத்தி சொல்லவோ நாம் வரவில்லை. அது எமது வேலையுமில்லை. வந்தோமா ரீயை குடித்தோமா வடையைச் சாப்பிட்டோமா என போய்க்கிட்டே இருக்க வேண்டும். இருந்து ரீ குடித்தவர்களுக்கே ஆப்பு வைக்கிற வேலையை செய்ய வேண்டாம். ரீ குடிக்கிறீங்களா என்று சொன்ன தமிழ் அரசியல்வாதிகளையே போட்டுத்தள்ளியவர்களை வளர்த்து விட்டதும் எமது தமிழ்ச்சமூகம்தான் அதனால்தான் நாமும் நிறைய எச்சரிக்கையாக இருக்கவேண்டியிருக்கிறது.
ஆகவே தமிழர்கள் இவ்வுலகில் இருக்கும் வரை ரீயும் வடையும் அவர்களுடன் சேர்ந்தே இருக்கும். தமிழர்கள் நடாத்தும் அரசியல் மற்றும் கலை நிகழ்ச்சிகள் எத்தனை அறுவையாக இருந்தாலும் எமக்கு ஆறதலாக இருக்கக்கூடியது அங்கு தரப்படும் ரீயும் வடையும்தான்.
ஆகா என்னவொரு அறுவை!!! தப்பியது உங்கள் புண்ணியம்